தமிழகத்தில் பருவமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக ராமதாஸ் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதே சமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அதிகமான மழையால் சென்னை புறநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்கி விட்ட போதிலும், ஆரம்பத்தில் சில நாட்கள் பெய்த மழை, அதன்பின்னர் சொல்லிக் கொள்ளும்படியாக பெய்யவில்லை.
இதனால் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும், பிற மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்ட சரிவும் ஏற்பட்டு விடுமோ என மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தான், கடந்த சில நாட்களாக கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை பல வழிகளில் நன்மை செய்யும் என்பதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.